ருமேனியாவில் குடியிருப்பில் மோதிய ட்ரோன்: இருவர் காயம் – ரஷ்யாவுக்கு நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்
ருமேனியாவின் கிழக்கு பகுதியிலுள்ள கலாட்டி நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ரஷ்ய ஆளில்லா விமானம் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக ருமேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. நேட்டோ பொதுச்செயலாளர், “ரஷ்யாவின் பொறுப்பற்ற நடவடிக்கை அனைவருக்கும் ஆபத்தானது” என்று தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஆணையத் தலைவர், “மாஸ்கோவின் ஆக்கிரமிப்புப் போர் இன்னொரு எல்லையைத் தாண்டியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
உக்ரைன் போரின் கடந்த நான்கு ஆண்டுகளில் ரஷ்ய ட்ரோன்கள் பலமுறை ருமேனிய எல்லைக்குள் நுழைந்திருந்தாலும், ருமேனியர்கள் காயமடைவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பின்னர் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சம்பவம் பற்றிய தகவலை தற்போது தான் அறிந்ததாகக் கூறினார். மேலும், ட்ரோனின் சிதைவுகளை “நடுநிலையான விசாரணைக்காக” ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
இதற்கிடையில், குடியிருப்பு கட்டிடத்தின் 10வது மாடியில் ட்ரோன் மோதியதும் அதில் இருந்த முழு வெடிகுண்டுகளும் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக ருமேனிய அவசரநிலை ஆணையம் தெரிவித்துள்ளது. காயமடைந்த இருவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும், தீ விபத்துக்குப் பிறகு சுமார் 70 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ட்ரோன் கண்டறியப்பட்டதும் உடனடியாக இரண்டு F-16 போர் விமானங்கள் அனுப்பப்பட்டதாக ருமேனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ட்ரோன் கண்டறியப்பட்ட தருணத்திலிருந்து அது மோதிய நேரம் வரை இராணுவத்துக்கு வெறும் நான்கு நிமிடங்கள் மட்டுமே இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
மோதிய ட்ரோன் “ஷாஹெட்-136” அல்லது “ஜெரான்-2” வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும், அதன் முழு வெடிபொருள்களும் தாக்கத்தின் போது வெடித்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.




