ட்ரம்பின் அழைப்பை நிராகரித்தது பாகிஸ்தான்!
இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கான அமெரிக்காவின் ‘ஆபிரகாம் உடன்படிக்கையில் (Abraham Accords) இணையுமாறு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
இஸ்ரேலுடனான உறவை சீராக்கும் இத்தகைய ஒப்பந்தங்கள் பாகிஸ்தானின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு எதிரானது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் Khawaja Asif திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
” எங்களுடைய அடிப்படை கொள்கைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் முரணாக அமையும் எந்தவொரு உடன்படிக்கையிலும் பாகிஸ்தான் இணையக் கூடாது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.
இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவானது; இந்த உடன்படிக்கை எங்களுக்கு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல” எனவும் அமைச்சர் Khawaja Asif கூறியுள்ளார்.
ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி உடன்படிக்கையின் ஓர் அங்கமாக, மேலும் பல நாடுகள் இஸ்ரேலுடனான தங்களது உறவை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ட் டிரம்ப் வலியுறுத்தி வரும் நிலையிலேயே பாகிஸ்தான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
“சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த ஆபிரகாம் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும்.” – என்று ட்ரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார்.
“அனைத்து நாடுகளும் உடனடியாக ஆபிரகாம் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்று நான் கட்டாயமாகக் கோருகிறேன்.
ஈரான் என்னுடன் இந்த அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டால், அமெரிக்க ஜனாதிபதி என்ற முறையில், அவர்களும் இந்த இணையற்ற உலகளாவிய கூட்டணியில் ஒரு பகுதியாக இருப்பதை நான் பெருமையாகக் கருதுவேன்.
இதன் மூலம் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் ஒன்றுபட்ட, சக்திவாய்ந்த மற்றும் பொருளாதார ரீதியாக உலகின் வேறு எந்தப் பகுதிக்கும் இல்லாத அளவிற்கு வலிமையான ஒரு மண்டலமாக மாறும்.” – எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.





