இன்னும் இறுதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை: ஈரான் தகவல்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இறுதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மீள திறப்பது மற்றும் தற்காலிகப் போர்நிறுத்தம் போன்ற முக்கிய அம்சங்களில் இரு நாடுகளும் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக இன்று மதியம் தகவல் வெளியானது.
அமைதி ஒப்பந்தம் இன்று இறுதிப்படுத்தப்படலாம் என அமெரிக்க இராஜாங்க செயலாளரும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
எனினும், ஈரானிய உயர்மட்டத் தலைமையுடன் தொடர்புகொள்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாக இந்த நடைமுறை சற்று தாமதமாகி வருவதாக அமெரிக்கத் தரப்பு கருதுகிறது.
பொருளாதாரத் தடைகள் நீக்கம் மற்றும் அணுசக்தித் திட்டம் போன்ற மிகவும் சிக்கலான விவகாரங்களை, அடுத்தக்கட்ட சந்திப்புகளின்போது ஆராய்வதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளன.
இன்று அமைதி ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்படலாம் என தகவல் வெளியானதால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் குறைந்துள்ளன.





