இலங்கை செய்தி

வலி. வடக்கில் ஐந்தாவது வாரமாக வீதியில் இறங்கி போராடும் மக்கள்!

யாழ். வலிகாமம் வடக்கு பகுதிகளில் தங்களின் பூர்வீகக் காணிகளை உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் , இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாக இன்று ஐந்தாவது வாரமாக வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வலிகாமம் வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் யுத்தம் காரணமாக அவர்களது சொந்த இடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

அன்றிலிருந்து இன்று வரை சுமார் 36 வருடங்களாக அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயங்களாகவே பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், தங்களின் சொந்த நிலங்களிலிருந்து பாதுகாப்புத் தரப்பினர் இன்னும் வெளியேறவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தங்களின் சுமார் 651 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நிலங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் கடந்த பல வருடங்களாகப் பல்வேறு வடிவங்களில் போராடி வருகின்றனர்.

எனினும், இதுவரை உரிய தீர்வு கிடைக்காத நிலையிலேயே, வாராந்தம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதாக மக்கள் தீர்மானித்து, இன்று 5ஆவது வாரமாகவும் வீதியில் இறங்கிப் போராடினர்.

எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வெசாக் பௌர்ணமி தினம் வரை, உயர்பாதுகாப்பு வலய எல்லைப் பகுதி முழுவதும் கறுப்புக்கொடிகளைப் பறக்கவிட்டுப் பாரிய அளவிலான எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகக் காணி உரிமையாளர்கள் இதன்போது அறிவித்தனர்.

இந்த நீதிக்கான போராட்டத்தில் கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும், அரச நிர்வாக உத்தியோகத்தர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று நடைபெற்ற வாராந்தப் போராட்டத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் நேரில் கலந்துகொண்டு, மக்களின் நில உரிமைப் போராட்டத்துக்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!