போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வு: மஹிந்தவுக்கு கதவடைப்பு?
கொழும்பில் நேற்று நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்விற்கு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படாமை தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத்,
“ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,
பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோர் பத்தரமுல்லவில் நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் நினைவு விழாவில் அதிகாரபூர்வ பதவிகளில் இருப்பவர்கள் என்ற அடிப்படையில் கலந்து கொண்டனர்.
வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த நினைவு நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை.” என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் போர் முடிவடையும் தருவாயில் மஹிந்த ராஜபக்சவே ஜனாதிபதியாக இருந்தார்.
எனவே, போரை முடிப்பதற்கு அவரே அரசியல் தலைமைத்துவம் வழங்கினார் என சிங்கள மக்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறான நிகழ்வுக்கு மஹிந்த கட்டாயம் அழைக்கப்பட வேண்டும் என்பதே ராஜபக்ச சார்பு அரசியல் வாதிகளின் கருத்தாக உள்ளது.





