ஃபுஜைரா வழியாக எண்ணெய் ஏற்றுமதி : அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் உத்தரவு!
ஐக்கிய அரபு அமீரகம், 2027-ஆம் ஆண்டுக்குள் ஃபுஜைரா வழியாகத் தனது ஏற்றுமதித் திறனை இரட்டிப்பாக்கும் நோக்கில், ஒரு புதிய எண்ணெய் குழாய் அமைக்கும் பணியை விரைவுபடுத்தி வருகிறது.
அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத், மேற்கு-கிழக்கு குழாய் திட்டத்தை விரைவுபடுத்துமாறு அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு (ADNOC) உத்தரவிட்டுள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தியை தவிர்ப்பதற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே அபுதாபி கச்சா எண்ணெய் குழாய் திட்டத்தை இயக்குகிறது. இது ஒரு நாளைக்கு 1.8 மில்லியன் பீப்பாய்கள் வரை கொள்ளளவு கொண்டது. இதன் மூலம் ஜலசந்திக்கு வெளியே கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடிகிறது.
ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு தடைபட்டுள்ளது. இது எரிசக்தி விலை உயர்வுகளுக்கும், பொருளாதார மந்தநிலை குறித்த அச்சங்களுக்கும் வழிவகுத்துள்ள நிலையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.




