மட்டக்களப்பில் 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்த முற்பட்ட சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
தமது தந்தையுடன் மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வகுப்பு ஒன்றுக்காக சென்ற சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
குறித்த தனியார் வகுப்பு நேற்று இடம்பெறாததன் காரணமாக தந்தை மட்டக்களப்பு நகரில் உள்ள தமது உறவினர் வீடொன்றுக்கு அருகில் சிறுமியை விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் நீண்ட நேரமாகியும் குறித்த சிறுமி அந்த உறவினர் வீட்டை சென்றடையவில்லை என, அவருடைய தந்தைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தை உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.
அந்த பகுதியில் சந்கேத்திற்கு இடமாக முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்ததை அவதானித்த அவர், அதனை சோதனை செய்தபோது தனது மகள் மயக்கமுற்ற நிலையில் இருந்ததை அவதானித்துள்ளார்.
உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்ததுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸிலும் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த குற்றச் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியை பொறுப்பேற்க வந்த நபர் ஒருவரை பிரதேச மக்கள் இணைந்து மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அத்துடன் அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்திற்கு அமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் வேறு ஒரு இடத்தில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர்கள் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அந்த பகுதியில் தனியார் வகுப்புகளுக்கு செல்லும் சிறுமிகளை ஆசை வார்த்தைகளை கூறி கடத்தும் வகையிலான குழுவொன்று செயற்பட்டு வந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.