நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல்
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், தேசிய தேர்வு முகமை நடத்திய தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு 2026 மே 3ஆம் திகதி நாடு முழுவதும் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டும் 31 நகரங்களில் தேர்வு நடைபெற்றதுடன், சுமார் 1.4 இலட்சம் தமிழக மாணவர்கள் உட்பட மொத்தம் 22,05,035 பேர் இதில் பங்கேற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, இந்திய அரசின் ஒப்புதலுடன் தேசிய தேர்வு முகமை இந்த நீட் தேர்வை ரத்து செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தற்போது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த முடிவு, நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கு தயாராகியிருந்த லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கையை பாதித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 2024ஆம் ஆண்டிலும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அப்போது ஆறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு 95 பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தும், மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து கிராமப்புற, அரசுப் பள்ளி மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை மாநிலங்களே நிரப்ப அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





