பெரும்பான்மை நிரூபிப்பு: இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!
தவெக அரசுமீதான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு தமிழக சட்டப்பேரவையில் இன்று (13) நடைபெறவுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தனிப் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய திமுக கூட்டணி கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரினார்.
அதில் 5 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ், திமுக கூட்டணியை முறித்து கொண்டு தவெகவுக்கு ஆதரவு அளித்தது. ஏனைய கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கின. இதன்மூலம் தவெகவின் பலம் 120-ஆக உயர்ந்தது.
இதனையடுத்து கடந்த 10-ம் திகதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார். 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் மே 13-ம் திகதிக்குள் (இன்று) நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அர்லேகர் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இதற்கிடையே, இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய், ராஜினாமா செய்துவிட்டார்.
மேலும், திருப்பத்தூரில் ஒரு ஓட்டில் வென்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி வாக்கெடுப்பில் பங்கேற்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதனால் தவெக வெற்றிபெற்ற 108 தொகுதிகளில் கையில் 106 எம்எல்ஏக்கள் தான் இருக்கின்றனர்.
தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரசிடம் 5, விசிக, இந்திய கம்யூ. மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளிடம் தலா 2 வீதமாக 8 இடங்கள் என மொத்தம் 119 இடங்கள் உள்ளன.
இதன்மூலமே தவெகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைத்து விட்டன.
இதுதவிர தவெகவுடன் கூட்டணி அமைத்து, பெரும்பான்மையை நிருபிப்பதில் விஜய்க்கு, அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான ஒருதரப்பு எம்எல்ஏக்கள் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.
அந்த அணியில் சுமார் 30 எம்எல்ஏக்கள் வரை உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், அமமுகவின் எம்எல்ஏ காமராஜ், தவெகவை ஆதரிப்பதாக சட்டப்பேரவையில் வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.
தவெகவுக்கு ஆதரவு பலம் 150 வரை இருப்பதால் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைப்பதில் விஜய்க்கு சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.





