இந்தியாவின் முப்படைகளுக்கு புதிய தலைமை தளபதி நியமனம்!
இந்திய முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் ராஜா சுப்ரமணி, வரும் மே 30ஆம் திகதி புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்பார்.
மேற்படி பதவியை தற்போது வகிக்கும் தளபதி அனில் சவுகான் ஓய்வு பெறும் நிலையிலேயே, இப்புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் துணை தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜா சுப்ரமணிக்கு, இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளில் நிலவும் பாதுகாப்புச் சூழல்கள் குறித்து சிறந்த அனுபவம் உள்ளது.
சுமார் 39 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய இவர், லக்னோவில் உள்ள மத்திய ராணுவ கட்டளையின் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





