அமெரிக்காவின் தேசிய கடன் : 02ஆம் உலகப்போருக்கு பின் சாதனை அளவு உயர்வு!
அமெரிக்காவின் தேசியக் கடன் 31.27 டிரில்லியன் டொலர்களை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடனின் பங்கு தற்போது 100.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தக் கடன் அளவு, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு (1946-ல்) பதிவு செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 106 சதவீதம் என்ற இலக்கை நெருங்குகிறது.
அதேநேரம் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தக் கடன், போருக்குப் பிந்தைய சாதனையை விஞ்சும் என்றும், ஒரு தசாப்தத்திற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 120 சதவீதத்தை எட்டக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த பாரிய அதிகரிப்பானது பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கக்கூடும் என்றும் காங்கிரஸின் வரவுசெலவு அலுவலகம் கணித்துள்ளது.
இதேவேளை அமெரிக்க அரசாங்கம் வசூலிக்கும் ஒவ்வொரு டொலருக்கும் 1.33 டொலர்களைச் செலவிடுகிறது.
இதனால், இந்த ஆண்டு 1.9 டிரில்லியன் டொலர் மதிப்பிலான வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை அந்நாடு எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.





