வோஷிங்டனில் பதற்றம்: டொனால்ட் ட்ரம்ப் அவசரமாக வெளியேற்றம்
வொஷிங்டனில் உள்ள ‘ ஹில்டன்’ ஹோட்டலில் அமெரிக்க ஜனாதிபதி கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வின் போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹில்டன் விருந்தகத்தின் மண்டபத்திற்குள் “பெரிய சத்தம்” சத்தம் கேட்டவுடன், ஜனாதிபதியும் விருந்தினர்களும் தரையில் விழுந்து பாதுகாப்பைத் தேடியுள்ளனர். இதன்போது உடனடியாகச் செயற்பட்ட பாதுகாப்புப் பிரிவினர், ஜனாதிபதியையும் மெலனியா ட்ரம்பையும் பிரதான மேடையிலிருந்து அகற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஜனாதிபதி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நவீன ரக துப்பாக்கிகளுடன் கூடிய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் அவர் அமர்ந்திருந்த பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பலத்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பிலான காணொளிகள் வெளியாகி பதற்றத்தினை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பிடிபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தத் தான் விரும்புவதாகவும், இருப்பினும் பொலிஸாரின் அறிவுறுத்தலின்படி தாம் செயல்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





