அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தையில் குழப்பம் – நேரம் கேள்விக்குறி
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் திங்கட்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவை எப்போது நடைபெறும் என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகியதால், பேச்சுவார்த்தையின் நேரம் தற்போது தெளிவற்றதாகியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளைப் போன்றே, அமெரிக்கக் குழுவை துணை ஜனாதிபதி JD Vance தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இஸ்லாமாபாத் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், ஈரான் தரப்பிலிருந்து முரண்பட்ட சிக்னல்கள் வெளியாகி வருகின்றன. ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக, இறுதி நேரத்தில் பேச்சுவார்த்தை தாமதமாவதோ அல்லது ரத்து செய்யப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவோ கூறப்படுகிறது.
இதனிடையே, அந்த கடல் வழியில் அமெரிக்கா முற்றுகை விதித்துள்ளதுடன், அண்மையில் ஒரு ஈரானிய சரக்குக் கப்பலையும் கைப்பற்றியுள்ளது. இந்த முற்றுகையை நீக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
பொதுவாக இத்தகைய தூதரக பேச்சுவார்த்தைகள் கடைசி நிமிட மாற்றங்களுடன் நடைபெறுவது வழமையானது. இருப்பினும், இம்முறை காணப்படும் அளவிலான நிச்சயமற்ற தன்மை, நீண்டகால அமைதி ஒப்பந்தம் எட்டுவதில் இன்னும் பெரிய தடைகள் உள்ளதை சுட்டிக்காட்டுகிறது.





