மட்டக்களப்பை உலுக்கிய சம்பவம்: மேலும் ஒரு சந்தேக நபர் கைது!
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொடர் பெண் கொலைகள் மற்றும் தாலி உள்ளிட்ட நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் நேற்று (26.03.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மயக்க மருந்துப் பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித்த லீலாரத்தின தலைமையில் விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி.மேனன் பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த அதிரடி விசாரணையில் ஏற்கனவே ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் மூவரை நான்கு நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
அந்தத் தடுப்புக் காவல் விசாரணையின் போதே, இந்தத் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் வியாழக்கிழமை கைதானார்.
கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மயக்க மருந்துப் பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 20.03.2026 அன்று வவுணதீவு – கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மயக்க மருந்து கொடுக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
பின்னர் அவர் கொக்கட்டிச்சோலை – நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் உதவியோடு அவர் உயிரோடு காப்பாற்றபட்டார்.
அதே கிணற்றிலிருந்து ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது. மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்தக் கொடூரச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டவர்களில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைக் கொள்வனவு செய்ததாகக் கருதப்படும் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை (27) மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் இக்கொலைகளின் பின்னணியில் உள்ள முழுமையான வலையமைப்பைக் கண்டறியும் நோக்கில் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.





