ஊசிமலை ஊட்டியில் செல்பி மோகத்தால் நடந்த விபரீதம்!
இந்தியாவின் ஊட்டி ஊசிமலை (Needle Rock View Point) பகுதியில் நேற்று (19) மாலை செல்பி எடுக்க முயன்ற போது 150 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்த இளைஞர் ஒருவர், 12 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று மாலை ஊசிமலை பகுதியில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குச் சென்று செல்பி எடுக்க முயன்றபோது நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்ததையடுத்து படுகாயமடைந்த இளைஞர் , தனது கையடக்கத் தொலைபேசி மூலம் தான் தங்கியிருந்த விடுதிக்குத் தகவல் அளித்துள்ளார்.
தகவலறிந்த பொலிஸார், வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ட்ரோன் மூலம் அவர் இருக்கும் இடத்தை உறுதி செய்துள்ளனர்.
இரவு நேரம் மற்றும் காட்டு யானைகளின் நடமாட்டம் காரணமாக மீட்புப் பணியில் சிக்கல் நீடித்துள்ளது.
இதையடுத்து குன்னூரிலிருந்து வரவழைக்கப்பட்ட இராணுவ வீரர்கள், நவீன உபகரணங்களுடன் நள்ளிரவில் மீட்புப் பணி தொடர்ந்துள்ளது.
சுமார் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் இன்று அதிகாலை குறித்த இளைஞன் பத்திரமாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





