322 சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள் உருவாக்கம் வேலைத்திட்டம் ஆரம்பம்!
“சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள்” வேலைத்திட்டம் இன்று (16) களுத்துறை மாவட்டத்தின் சிவ்தெவிகம கிராமத்தை மையமாகக் கொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, ஒழுக்கமான மற்றும் நேர்மையான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த அணுகுமுறையுடன் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் Sunil Handunnethi. தலைமையில் இன்று மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால், அனைத்து மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இந்த தேசிய வேலைத்திட்டம், “தேசத்தை கட்டியெழுப்பும் செழிப்பான கிராமம்” என்ற தொனிப்பொருளின் கீழ் மூன்று ஆண்டு திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டமானது, ஒரு கிராமத்தின் பௌதிக வளர்ச்சியை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், ஆறு முக்கிய துறைகளின் ஊடாக மக்களை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய கல்வி மேம்பாடு, பொருளாதார அபிவிருத்தி,சுகாதாரம் மற்றும் துப்புரவு, சமூக நல்வாழ்வு, கலாசாரம் மற்றும் ஆன்மீக வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய பிரதான துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.
களுத்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (கிளீன் ஸ்ரீலங்கா) எஸ்.பி.சி. சுகீஷ்வர கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





