இலங்கை செய்தி

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் – மட்டக்களப்பில் நாளை மறுதினம் மாபெரும் போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு மாற்றீடாகக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்தினால் முயற்சிக்கும் புதிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தாயக செயலணி அமைப்பின் இணைப்பாளர் இ.செல்வகுமார் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் நாளை மறுதினம் முன்னெடுக்கப்பட்ட தீர்மானித்துள்ளதாக கூறிய அவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கோரத்தை உணர்ந்தவர்களாக இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்பிலான ஊடக சந்திப்பு இன்று மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு
அழைப்பு விடுத்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கோர முகத்தை நன்கறிந்த இனமாக, அதன் பாதிப்புகளை முற்றுமுழுதாக அனுபவித்த இனமாக நாம் இருக்கின்றோம். தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் குறித்த சட்டத்தினால் பாதிப்புற்று, எதிர்க்கட்சியில் இருக்கும் போது இச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தது.

ஆனால் ஆட்சி பீடமேறியதும் மாற்றம் என்று சொல்லி வந்தவர்கள் வழமையான சிங்கள பேரினவாத அரசுகள் போன்று தங்கள் ஆட்சியைத் தக்க வைக்கும் நோக்கோடு செயல்பட்டு வருகின்றமையை அனைவரும் நன்கு அவதானித்திருப்பீர்கள்.

அதே வகையிலேயே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாமலாக்குவோம் என்று ஆட்சி பீடமேறியவர்கள் தற்போது அதனை விட பயங்கரமான சரத்துக்களை உள்ளடக்கியதாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்று முற்று முழுதாக மக்களை விடுத்து அரசாங்கத்தை காப்பாற்றும் முகமாக மனித உரிமைகளுக்கு எதிரான சட்டத்தினைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றது.

இதன் பாதிப்பின் உச்சத்தில் இருக்கும் தமிழ் மக்களாகிய நாம் பாரிய எதிர்ப்பின் மூலம் தடுத்து நிறுத்த வேண்டும். பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் அரசு எவ்வாறாயினும் இதனை நிறைவேற்றியே தீரும் என்ற அடிப்படை இருந்தாலும் இதற்கு தமிழ் மக்களின் முற்றுமுழுதான எதிர்ப்பு இருந்தது என்பதை உலகுக்கு நாம் பறைசாற்ற வேண்டும்.

இச்சட்டம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கொண்டு வந்தாலும் கடந்த காலங்களில் இதன் பாதிப்புகளை முஸ்லீம் மக்களும், அரகலயின் பின்னராக சிங்கள மக்களுக்கும் உணர்ந்திருப்பார்கள். எனவே இச்சட்டத்திற்கு முலாம் இடப்பட்டதாக வரும் புதிய பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தினையும் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.

எனவே மனித உரிமைகளுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் சட்டத்திற்கு எதிரான குறித்த போராட்டத்திற்கு தங்கள் ஒவ்வொருவரினதும் ஆதரவும், பிரசன்னமும் தவறாது இருக்கும் என இன உணர்வுடன் நம்புகின்றோம்” என்றார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!