பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்மீது அரசியல் போர் தொடுப்பு: ஆளுங்கட்சி பதிலடி!
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் என தென்னிலங்கையிலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி UNP , ஐக்கிய மக்கள் சக்தி SJP மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP என்பனவே இவ்வாறு வலியுறுத்தியுள்ளன.
எனினும், அரசியல் காரணங்களுக்காக எதிரணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஏற்க வேண்டியதில்லை என ஆளுங்கட்சி அறிவித்துள்ளது.
சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மேற்படி சம்பவம் நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதால், இந்தப் படுகொலை குறித்து நியாயமான விசாரணை நடக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் நிகழ்ந்த கொலைச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று பாதுகாப்பு அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். மேலும் சட்டத்தரணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, “ தமது பணியை சரிவர செய்யமுடியாவிட்டால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வீடு செல்ல வேண்டும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.
இந்நிலையில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றுபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் தான் பதவி விலகப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
“சட்டத்தரணி ஒருவரது படுகொலை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டவுடன், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
தற்போதைய நிலையில், உயர்மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த காலங்களில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தியவர்களே இன்று எம் மீது அத்தகைய குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர்.
எமது ஆட்சியில் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றிச் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுகின்றன. இந்த விசாரணைகளின் முடிவில் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பது நாட்டுக்குத் தெரியவரும்.
சட்டத்தரணிகள் உட்பட அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.





