West Bank பகுதியை கட்டுப்படுத்த இஸ்ரேல் வியூகம்: ஆஸ்திரேலியா எதிர்ப்பு!
மேற்குக் கரையை (West Bank) கையகப்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக, உலக நாடுகளின் கடும் கண்டனங்கள் வெளிவந்து வரும் நிலையில், ஆஸ்திரேலியாவும் தனது தெளிவான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
பாலஸ்தீன நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இஸ்ரேலின் ஆட்சியையும் கட்டுப்பாட்டையும் விரிவுபடுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதன்ஓர் அங்கமாகவே மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலி குடியேற்றங்களை மேலும் விரிவுபடுத்தப்பட்டுவருகின்றது.
இந்த நகர்வுகள், சுயாதீனமான மற்றும் இறையாண்மை கொண்ட ஒரு பாலஸ்தீன் நாடு உருவாகும் வாய்ப்பை முற்றாகத் தடுக்க முனைகின்றன என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையால் எடுக்கப்பட்ட இந்த முடிவு, அந்தப் பகுதியில் நிலவும் அமைதியையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளதாக ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தகத் துறை வெளியிட்ட அறிக்கையில், “மேற்குக் கரை மீது இஸ்ரேலின் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தும் பாதுகாப்பு அமைச்சரவையின் முடிவுக்கு ஆஸ்திரேலியா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இந்த முடிவு பிராந்திய நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் பாதிக்கும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச சட்டத்தின் கீழ் மேற்குக் கரையில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலி குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை என்றும், அவை இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் இடையிலான அமைதி முயற்சிகளுக்கு மிகப்பெரிய தடையாக உள்ளன என்றும் ஆஸ்திரேலிய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் மக்கள்தொகை அமைப்பை மாற்றும் எந்தவொரு நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அது நிலையான அமைதிக்கான வாய்ப்புகளை மேலும் சிதைக்கும் என்றும் ஆஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.





