இலங்கை

வல்வெட்டித்துறைத்துறையில் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு இடம்பெற்று 55 ஆண்டுகள் பூர்த்தி – சிவாஜிலிங்கம் நினைவுப்பகிர்வு

1971 ஆம் ஆண்டு மாசி மாதம் 07 ஆம் திகதி தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு யாழ்ப்பாணம் வடமராட்சி – வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது. அன்று வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக இருந்த ஞானமூர்த்தி ஐயா, சபாரத்தினம்பிள்ளை ஐயா, அரச நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக இருந்த வேற்பிள்ளை ஐயா ஆகிய மூவரும் மக்களுடன் இணைந்து தமிழ்க் கட்சிகளினுடைய ஒற்றுமை மாநாட்டைக் கூட்டி இருந்தார்கள்.

1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டு வர எடுத்த முயற்சியை தொடர்ந்து தமிழ்மக்களிடம் ஒற்றுமை வர வேண்டும் என்ற அடிப்படையிலே இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழர் சுயாட்சிக் கழகம், ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி ஆகிய நான்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டு அன்றைய யாழ்ப்பாண மேயராக இருந்த நாகராஜா தலைமையிலே ஒற்றுமை மாநாடு வல்வெட்டித்துறையில் உள்ள எட்வேர்ட் தங்கவடிவேல் ஐயாவின் வீட்டில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தை நோக்கி ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வைப்பதென்றும் இந்த நான்கு கட்சிகளும் ஒற்றுமையாக இயங்குவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டு இது தமிழர்களினுடைய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என அறிவிக்கப்பட்ட போது ஆதரவாளர்களோடு இணைந்து வெடி கொழுத்தி பாடசாலை மாணவனாக நானும் மகிழ்ச்சியிலே ஆரவாரப்பட்டதனை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

இப்போது அனுர அரசிலும் ஒரு புதிய அரசியலமைப்பு வந்திருக்கின்ற நிலையில் நாங்கள் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு கட்சிகளிடையே ஒரு பொது உடன்பாட்டை எட்டி ஒரே கோரிக்கையை நாங்கள் வைப்போமாக இருந்தால் அது மிகவும் பலம் பொருந்தியதாக இருக்கும்.

1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 14 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மான பிரகடனத்திலே இது “வல்வெட்டித்துறையிலே கருவாகி திருகோணமலையிலே உருவாகி” என்கிற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. குறித்த வரலாற்று சம்பவம் இடம்பெற்று 55 ஆண்டுகள் நேற்றோடு நிறைவடைந்திருக்கின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த தகவல்களை 07.02.2026 அன்று இரவு வல்வெட்டித்துறை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவரான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் தமிழ்த் தேசியக் கட்சியின் வடமராட்சி – வல்வெட்டித்துறை அமைப்பாளரான விமலதாஸ் கவிச்செல்வன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினரான செல்வராசா விதுசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!