மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி – ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தியது
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (07) நடைப்பெற்ற 2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் 2 ஆவது லீக் ஆட்டத்தில், ஸ்கொட்லாந்து அணியை 35 ஓட்டங்களால் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப் பெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் பிரண்டன் கிங் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரண்டன் கிங் 30 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாய் ஹோப் 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
மத்திய வரிசையில் களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மையர் ஸ்கொட்லாந்து பந்துவீச்சை சிதறடித்தார். அவர் வெறும் 36 பந்துகளில் 64 ஓட்டங்களை குவித்து அணியின் ஓட்டத்தை உயர்த்தினார்.
அவருக்கு ஆதரவாக விளையாடிய ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 13 பந்துகளில் 26 ஓட்டங்களையும், ரோவ்மேன் பவல் 14 பந்துகளில் 24 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் மேற்கிந்திய தீவுகள் அணி 05 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களைப் பெற்றது.
ஸ்கொட்லாந்து தரப்பில் பிராட் கியூரி 2 விக்கெட்டுகளையும், சபயான் ஷெரீப், மைக்கேல் லீஸ்க் மற்றும் ஓலிவர் டேவிட்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு 183 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இன்னிங்ஸைத் தொடங்கிய ஸ்கொட்லாந்து அணி 18 ஓவர்களில் அனைத்து
விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
ஸ்கொட்லாந்து அணி சார்பில் ரிச்சி பெரிங்டன் 42 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.





