காலநிலை மாற்றமும் நிதி நெருக்கடியும் : ஆபத்தை உணராத அரசியல் தலைவர்கள்!
உலகளாவிய வெப்பநிலை உயர்வு மற்றும காலநிலை நெருக்கடியால் நிதி வீழ்ச்சி தூண்டப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அரசாங்கங்களும் முதலீட்டாளர்களும் சேதத்தின் அளவையும் தீவிரத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் மேலோட்டமான பொருளாதார மாதிரிகளை நம்பியுள்ளதாக ஆய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசாங்கங்களும் நிதி நிறுவனங்களும் காலநிலை நெருக்கடியின் தாக்கங்கள் படிப்படியாக இருக்கும் என்று கருதும் மாதிரிகளை நம்பியிருப்பதால் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
எக்ஸிடெர் (Exeter) பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி 12 நாடுகளில் உள்ள 60 க்கும் மேற்பட்ட காலநிலை விஞ்ஞானிகளின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை 02 செல்ஸியஸாக அதிகரித்த பிறகு, காலநிலை சேதம் கட்டமைப்பு ரீதியாக கூட்டுச் சேர்வதாகவும், ஒரே நேரத்தில் பல துறைகளை சீர்குலைத்து, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நிலைமைகளை அச்சுறுத்துவதாகவும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒப்பந்தத்தின் 2C வரம்பு என்பது தொழில்துறைக்கு முந்தைய வெப்பநிலையை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பைக் குறிக்கிறது, இது தீவிர வானிலை, மீளமுடியாத சுற்றுச்சூழல் சேதம் மற்றும் பொருளாதார சீர்குலைவு அபாயத்தை கூர்மையாக அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





