வியாழன் மிகப் பெரிய கிரகமா? : உண்மையை உடைத்த விஞ்ஞானிகள்!
நமது சூரிய மண்டலத்தில் மிகப் பெரிய கிரகமாக அறிவிக்கப்பட்டுள்ள வியாழன் கிரகம் நாம் நினைத்ததை போன்று அவ்வளவு பெரிதாக இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாசாவின் ரோபோ ஜூனோ (robotic Juno) விண்கலத்தால் பெறப்பட்ட தரவுகளுக்கு அமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வியாழனின் அளவு மற்றும் வடிவத்தின் மிகத் துல்லியமான அளவீடுகளை விஞ்ஞானிகள் பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் அதன் சிக்கலான உட்புற அமைப்பை ஆராய முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜூனோ அவதானிப்புகளிற்கு அமைய, வியாழனின் பூமத்திய ரேகை விட்டம் 88,841 மைல்கள் (142,976 கிமீ) கொண்டிருப்பதைக் காட்டியது, இது முந்தைய அளவீடுகள் சுட்டிக்காட்டியதை விட சுமார் 5 மைல்கள் (8 கிமீ) சிறியதாகும்.
வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை வியாழனின் விட்டம் 83,067 மைல்கள் (133,684 கிமீ) என்றும், முன்னர் மதிப்பிடப்பட்டதை விட சுமார் 15 மைல்கள் (24 கிமீ) சிறியது என்றும் அவதானிப்புகள் காட்டுகின்றன.
நாம் வாழும் புவி கிரகத்தைப் போலவே, இந்த கிரகமும் ஒரு சரியான கோளம் அல்ல, மாறாக சற்று தட்டையானது என்றும் விஞ்ஞானிகள் மேலும் கூறியுள்ளனர்.
வியாழன், துருவங்களை விட பூமத்திய ரேகையில் சுமார் 7 சதவீதம் பெரியது. ஒப்பிடுகையில், பூமியின் பூமத்திய ரேகை துருவங்களில் அதன் விட்டத்தை விட 0.33 சதவீதம் மட்டுமே பெரியது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




