அமெரிக்காவின் கோல்டன் டோம் திட்டம் – எதிர்வினையாற்றிய ரஷ்யா!
கிரீன்லாந்தில் ஆயுதங்களை வைக்க வொஷிங்கடன் நடவடிக்கை எடுத்தால் மொஸ்கோ பதிலளிக்க தயாராக உள்ளது என ரஷ்ய மூத்த அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்க்டிக் தீவில் கோல்டன் டோம் (Golden Dome) ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை செயற்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் என்று துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் (Sergey Ryabkov) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ அமெரிக்கர்கள் பிராந்தியத்திற்கு சில ஆயுத அமைப்புகளை செலுத்த விரும்பினால் அல்லது கிரீன்லாந்தில் அவர்களின் கோல்டன் டோம் கருத்தின் சில கூறுகளை நிலைநிறுத்தினால், அது இராணுவ மற்றும் தொழில்நுட்ப இழப்பீட்டு நடவடிக்கைகள் தேவைப்படும் ஒரு சூழ்நிலையாக இருக்கும், மேலும் எங்கள் நிபுணர்கள் அவற்றை ஏற்கத் தயாராக இருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் – ரஷ்யாவிற்கும் இடையிலான கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான புதிய START ஒப்பந்தம் காலாவதியாகவுள்ள நிலையில் செர்ஜி ரியாப்கோவின் கருத்துக்கள் வந்துள்ளன.





