மகாபாரத அர்ச்சுனனே நான்: அர்ச்சுனா எம்.பி. கருத்து!
“மகாபாரதத்தில் வரும் பஞ்சபாண்டவர்கள்போலவே எனது குடும்பத்திலும் ஐந்து ஆண் பிள்ளைகள். அதனால்தான் எனக்கு அர்ச்சுனா என பெயர் வைத்தனர்.”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Arjuna தெரிவித்தார்.
சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு (02) ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“எனது தந்தை இலங்கை சுங்கத்திலும், இலங்கை பொலிஸிலும் சேவையாற்றியவர். இலங்கை பொலிஸ் கால்பந்தாட்ட அணியின் தலைவராகவும் இருந்துள்ளார்.
கறுப்பு ஜுலைக்கு பின்னரே அவர் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டார். புலிகளின் பொலிஸ் துறையில் இரண்டாவது பதவி நிலையில் இருந்தார்.
2009 ஆம் ஆண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு இன்னும் உள்ளது.
எனக்கு நான்கு அண்ணன்மார் உள்ளனர். இருவர் வெளிநாட்டில் வசிக்கின்றனர். ஏனைய இருவர் இங்குள்ளனர். நான் ஐந்தாவது பிள்ளை.
மகாபாரதத்தில் ஐந்து சகோதரர்கள்போல் இருந்ததால்தான் எனக்கு அர்ச்சுனா என்ற பெயர் வைத்தனர்.” -என்றார்.





