தொழிநுட்ப கோளாறு – பிரித்தானியாவில் வேகமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் தவறாக அபராதம் விதிப்பு
பிரித்தானியாவில் ஓட்டுநர்கள் சிலருக்கு வேகமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் தவறாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் தெரிவித்துள்ளன.
சில வீதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கெமராக்களின் தொழிநுட்ப கோளாறே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட A வீதிகள் மற்றும் மோட்டார் பாதைகளில் உள்ள, நிலைக்கு ஏற்ப வேகம் மாறும் முறைமையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், வேக வரம்பு மாற்றப்பட்டதும் சில ஓட்டுநர்கள் தவறாக வேகமாக ஓட்டியதாகக் கணக்கிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சீரமைப்பு பணிகள் தற்பாது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் அறிவித்துள்ளன. மேலும் இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை, சுமார் 2,650 தவறான கேமரா செயல்படுத்தல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அனைத்துக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை என்பதால், உண்மையில் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களின் எண்ணிக்கை இதைவிட குறைவாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை, இங்கிலாந்தின் மோட்டார் பாதைகள் மற்றும் முக்கிய A வீதிகளை கொண்ட வீதி வலையமைப்பின் 10% பகுதியை மட்டுமே பாதித்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் தெரிவித்துள்ளதன.
இதேவேளை, பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை திருப்பித் தரப்படும் என்றும், ஓட்டுநர் உரிமத்திலிருந்து புள்ளிகள் அகற்றப்படும் என்றும் அந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
எவ்வாறாயினும், வேகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடரும் என்றும், விதிமீறலில் ஈடுபடும் ஓட்டுநர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைகள் தெரிவித்துள்ளன.





