இந்தியாவில் முறைகேடாக நடந்துகொண்ட மகனை வெட்டிக் கொன்ற தாய்

துப்புரவுப் பணியாளராக வேலை செய்த தனது 35 வயது மகனை, 57 வயது தாயார் பிப்ரவரி 13ஆம் திகதி கொன்றதாக
பிரகாசம் காவல்துறைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் வட்டாரத்தில் குடும்பத்தாரின் உதவியோடு அந்தப் பெண் தன் மகனைக் கொன்று அந்த உடலை ஐந்து பகுதிகளாக வெட்டிச் சிதைத்ததாகக் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
மகன் கே.ஷியாம் பிரசாத்தை கே.லக்ஷ்மி தேவி கொன்றதாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஏஆர் தாமோதர், “காமப் பார்வை கொண்ட மகனின் முறைகேடான நடத்தையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் கொன்றுவிட்டார்,” என்றார்.
ஹைதராபாத், கம்மம், பெங்களூரு ஆகிய ஊர்களில் உள்ள தன்னுடைய உறவினர்களிடம் திருமணமாகாத ஷியாம் பிரசாத் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.தன் தாயாரின் சகோதரிகளைப் பாலியல் ரீதியாகத் தாக்கியதாகவும் நம்பப்படுகிறது.
கோடரி போன்ற கூரான ஓர் ஆயுதத்தால் ஷியாம் பிரசாத் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
உடல் பகுதிகளைத் தாங்கிய மூன்று சாக்குப் பைகள், கம்பம் கிராமத்தில் உள்ள நகலகாண்டி வாய்க்காலில் போடப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.தற்போது தலைமறைவாக உள்ள லக்ஷ்மி தேவியை அதிகாரிகள் தேடி வருவதாக தெரிவித்துள்ளது.