இலங்கை சுகததாச தேசிய விளையாட்டு வளாகத்தை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்
சுகததாச தேசிய விளையாட்டு வளாகத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப புனரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சுகததாச தேசிய விளையாட்டு வளாகம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு வளாகமாகும், இது வகுப்பு 1 விளையாட்டு வசதிகளை வழங்குகிறது.
400 மீற்றர், 200 மீற்றர் மற்றும் 80 மீற்றர் செயற்கை தடங்களைக் கொண்ட இலங்கையில் உள்ள ஒரே விளையாட்டு வளாகம் இது சர்வதேச தரத்திற்கு ஏற்ப சகல வசதிகளுடன் கூடியதாகும்.
2018 ஆம் ஆண்டு செயற்கை தடம் புனரமைக்கப்பட்டது, ஆனால் தற்போது அதில் பல விரிசல்கள் காணப்படுவதால், இது தேசிய மட்ட விளையாட்டுகளுக்கு பொருத்தமற்றது என இலங்கை தடகள சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இலங்கை விளையாட்டு வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு அனுப்புவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கத்துடன் சர்வதேச தரத்திற்கமைய இந்த தடத்தை புனரமைப்பது தேசிய முன்னுரிமையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், தடங்களை புனரமைத்தல், உதைபந்தாட்ட மைதானத்தை தயார் செய்தல், நேர இயந்திரங்களை நிறுவுதல் மற்றும் மின்விளக்கு கோபுரங்களைப் புனரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக விளையாட்டு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.