இலங்கை- அமைச்சர்களுக்கு இனி அரசு பங்களாக்கள் இல்லை: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிகள் முன்னர் பயன்படுத்திய 344 சொகுசு வாகனங்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது,
அவை ஏலம் விடப்பட அல்லது மீண்டும் பயன்படுத்தப்பட உள்ளன.
தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அமைச்சர்களுக்கு அரச பங்களாக்களை ஒதுக்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
கூடுதலாக, பாரம்பரியமாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரியில்லா வாகன அனுமதிகள் நிறுத்தப்படும்.
கடந்த அரசாங்கங்களில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரச பங்களாக்கள் தொடர்பான தீர்மானங்கள் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாக பாராளுமன்ற விவகாரங்களையும் மேற்பார்வை செய்யும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரங்களுக்குப் பதிலாக, பிரிவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விலை குறைந்த வாகனங்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
“எம்.பி.க்களுக்கு வரியில்லா வாகன அனுமதியை நாங்கள் வழங்க மாட்டோம். அவர்களுக்கு செலவு குறைந்த, எரிபொருள் சிக்கனமான வாகனங்கள் வழங்கப்படும்,” என்று அவர் கூறினார்.
கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பண ஆதாயங்களுக்காக வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன. சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அதிக தொகைக்கு பிறருக்கு அனுமதிகள் மாற்றப்பட்டன.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய பலன்களை இந்த முறை முதல் ரத்து செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிகள் பயன்படுத்தியதாக அடையாளம் காணப்பட்ட 344 சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட அல்லது அதை மீண்டும் வேறு வகையில் உபயோகப்படுத்தவும் அரசாங்கம் எத்தனிக்கிறது.
இவற்றில் சில வாகனங்களை ஏலம் விடுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அமைச்சரவை பத்திரத்தை சமர்பிப்பார் என அவர் கூறினார்.
“குறிப்பிட்ட சொகுசு வாகனங்களில் வி8 வாகனங்களும் உள்ளடங்குகின்றன ” என்று அவர் கூறியுள்ளார்.