தமிழுக்கு முதலிடம்: மீனவர்கள் விடுவிப்பு! பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை
“தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் எனவும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் விஜய் டெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடி தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்ததற்காக முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

“ மாநில வாழ்த்துப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வந்தது.
எனினும், உள்துறை அமைச்சால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட அறிவித்தலைத் தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சால் உரிய தெளிவுரையினை வழங்கவும்.” எனவும் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளது எனவும் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.

2026-ஆம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும், தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் காவலில் உள்ளனர் என்றும், 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் பிரதமரிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனவே, மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியை முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.




