கடலில் இணைய கேபிள் அமைப்பதில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் மோதல்
அமெரிக்கா மற்றும் சீனாவின் மேலாதிக்கப் போட்டி தற்போது கடல் தளத்தை எட்டியுள்ளது. தகவல் புரட்சியின் பாலங்களான கடலில் இணைய கேபிள்கள் தொடர்பாக இந்த இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தொலைபேசிகள், வீடியோ உரையாடல்கள், மின்னஞ்சல்கள் என இணையமே சர்வதேச தகவல் தொடர்பு கட்டமைப்பின் ஆதாரம் இருந்து வருகிறது.
உலகின் 95 சதவீத தரவுகள் தற்போது கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள 9 மில்லியன் மைல் நீளமுள்ள ஃபைபர் ஒப்டிக் கேபிள்கள் மூலம் மாற்றப்படுகின்றன.
தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடலில் கேபிள் அமைப்புகள் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையில் பனிப்போர் ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளது.
நீண்ட காலமாக, இந்த கடலுக்கடியில் கேபிள் கட்டமைப்புகள் அமெரிக்க நிறுவனங்களின் கைகளில் உள்ளது.
அண்மையில் சீனாவில் இருந்து ஒரு கேபிள் கூட்டமைப்பு கடலுக்குள் அமைக்கப்பட்டதில் இருந்து பிரச்சினை ஆரம்பமாகியது.
ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வகையில் சிங்கப்பூரிலிருந்து பிரான்ஸூக்கு கடலுக்கடியில் கேபிள் கட்டமைப்பை அமைப்பதற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட Subcom Consortium கூட்டமைப்புடன் போட்டியிட சீன நிறுவனமான HMN Tech Cable Network முன்வந்துள்ளது.
சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான Huawei, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து HMN கூட்டமைப்பில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் கடலுக்கு அடியில் உள்ள இணைய கேபிள் கட்டமைப்பு சீனாவின் கைகளில் சிக்காமல் தடுக்க அமெரிக்கா வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஜோ பைடன் நிர்வாகம் மறைமுகமாக நுழைந்து கூட்டமைப்பில் உள்ள நிறுவனங்களுக்கு வழிகாட்ட ஆரம்பித்துள்ளது.
அரசின் அழுத்தத்தால் கூட்டமைப்பில் இருந்த பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனமான சப்காம் பக்கம் சாய்ந்தன.
இதன் மூலம் சீனாவின் HMN Tech Cable Network போட்டியிலிருந்து விலகியது. இந்த திட்டம் அமெரிக்காவின் சப்காம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சீன அரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை நிறுவனம் என்று அழைக்கப்படும் Huawei நிறுவனத்தின் 5G வலையமைப்பை நிறுவுவதில் இருந்து அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் விலகியுள்ளன.
நிறுவனம் அனைத்து தகவல்களையும் சீன அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்வதாக கூறப்படுகிறது.
அண்மையில் Huawei போர்வையில் சீன அரசாங்கம் கடல் அடிவாரத்தில் உள்ள இணைய ஃபைபர் ஒப்டிக் கேபிள் கட்டமைபை்பை உளவு பார்க்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த கேபிள்கள் மூலம் கடத்தப்படும் தரவுகள், சர்வதேச நிதி பரிவர்த்தனைகள், இராணுவ தகவல்கள் ஆகியவற்றை சீன மறைக்கும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.
சைபர் மற்றும் டெலிகொம் வலையமைப்புகள் மூலம் சீன நிறுவனங்கள் உளவு பார்ப்பதாக அமெரிக்கா சந்தேகிக்கின்றது.
கடந்த காலங்களில், அமெரிக்க நிறுவனங்கள் சீன தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டன.
2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி சீன தொலைத்தொடர்பு சாதனங்களின் அனுமதியை அமெரிக்க அரசாங்கம் ரத்து செய்தது.
இது தவிர, சீன டெலிகொம் நிறுவனங்களும் அமெரிக்காவில் இருந்து செயற்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.