துருப்புக்களை மீளப் பெறும் விவகாரம் : அமெரிக்காவின் உத்தரவிற்காக காத்திருக்கும் நேட்டோ!
ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் அமெரிக்காவின் முடிவைப் புரிந்துகொள்ள கூட்டணி அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதாக நேட்டோ செய்தித் தொடர்பாளர் அலிசன் ஹார்ட் ( Allison Hart) கூறியுள்ளார்.
இந்த மாற்றம், ஐரோப்பா தொடர்ந்து பாதுகாப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும், நமது பகிரப்பட்ட பாதுகாப்பிற்கான பொறுப்பில் பெரும் பங்கை ஏற்க வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதாக பென்டகன் அறிவித்துள்ளது.
ஈரானால் அமெரிக்கா “அவமானப்படுத்தப்படுகிறது” என்று அந்நாட்டின் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் கூறியதைத் தொடர்ந்து, ஜெர்மனியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கையைக் குறைக்கும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த பென்டகன் அதிகாரி ஒருவர், ஜெர்மனியின் சமீபத்திய சொல்லாடல்கள் “பொருத்தமற்றதாகவும் உதவாததாக ” இருந்ததாகக் கூறினார்.
“இந்த எதிர்மறையான கருத்துக்களுக்கு அதிபர் சரியான முறையில் எதிர்வினையாற்றுகிறார்,” என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை அடுத்த ஆறு முதல் பன்னிரண்டு மாதங்களுக்குள் இந்தத் திரும்பப் பெறும் பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பென்டகன் தெரிவித்தது.
தற்போது ஜெர்மனியில் உள்ள ஒரு படைப்பிரிவுத் தாக்குதல் குழு திரும்பப் பெறப்படும் என்றும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அங்கு அனுப்படவிருந்த பட்டாலியன் குழு அனுப்பப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஸ்பெயின் மற்றும இத்தாலியில் இருந்தும் துருப்புக்களை திரும்பப் பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.





