தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்: பதறவைக்கும் செம்மணி!
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது ஒரு சிறுவரின் எலும்புக்கூட்டுத் தொகுதி உட்பட 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 341ஆக அதிகரித்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 22ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
நேற்றைய அகழ்வின் போது புதிதாக 2 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன.
மேலும் ஒரு சிறுவரின் எலும்புக்கூட்டுத் தொகுதி உட்பட 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
நேற்று இடம்பெற்ற அகழ்வின்போது செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மனித எலும்புக்கூட்டுத் தொகுதி குவியல் ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 23 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் குவியல்களாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்தும் மொத்தமாக இதுவரை 341 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 327 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.





