இந்தியா செய்தி தமிழ்நாடு

இலங்கை தமிழ்ப் பெண் கார் ஏற்றிக் கொலை: சென்னையில் பயங்கரம்!

சென்னை, கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், இலங்கை தமிழ் பெண்ணொருவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் பிரபல நட்சத்திர ஹோட்டலொன்று உள்ளது.

அதன் உள்புறம் உள்ள மது பாரில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இரு தரப்பினர் மது அருந்தினர். அப்போது, அவர்களுக்குள் நடனமாடுவதில் தகராறு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அங்கிருந்த பவுன்சர்கள் இரு தரப்பினரையும் உடனடியாக வெளியேற்றினர்.

ஆனால் வெளியில் வந்தும் இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். அவர்களைப் பவுன்சர்கள் மீண்டும் விலக்கி எச்சரித்து அனுப்பினர்.

இந்த மோதலால் நள்ளிரவில் மதுபார் மூடப்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்களில் ஒரு தரப்பினர் 3 பைக்குகளில் அங்கிருந்து அடுத்தடுத்து புறப்பட்டனர். மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வந்த சொகுசு காரில் கிளம்பினர்.

கோயம்பேடு பாலத்துக்கு கீழே சென்று கொண்டிருந்த போது ஏற்கெனவே தகராறில் ஈடுபட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவர்களில் ஒரு தரப்பினர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது காரில் வந்தவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, சொகுசு காரை அதிவேகமாக ஓட்டி எதிர்தரப்பினர் மீது மோதினர்.

இதில், மோட்டார் சைக்கிளை வாகனத்தை ஓட்டிச் சென்ற 18 வயது இளம்பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால், அமர்ந்திருந்த 17 வயது சிறுமிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, கொலையாளிகள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினர்.

நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்து கோயம்பேடு பேருந்து நிலைய பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், உயிரிழந்த பெண் யான்சி (18) என்பதும், விழுப்புரம் மாவட்டம் அனிச்சம் குப்பத்தில் (இலங்கைத் தமிழர்மறுவாழ்வு முகாம்) வசித்ததும், கடந்த 19- ஆம் திகதி திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரியைச் சேர்ந்த தோழி தம்பிதா என்பவர் மூலம் அறிமுகமான, சென்னை ராமாபுரத்தில் வசிக்கும் மற்றொரு தோழியான பவுசி தீபிகாவை (17) பார்க்க வந்ததும் தெரிந்தது.

பின்னர், கடந்த 10 நாட்களாக அவரது வீட்டிலேயே யான்சி தங்கியுள்ளார்.

இந்நிலையில் தான் 28-ம் ஆம் திகதி மாலை சினிமாவுக்கு செல்வதாகக் கூறி வெளியே சென்று மறுநாள் காலைவீட்டுக்கு வந்தவர்களைச் சிறுமியின் தாய் கண்டித்துள்ளார்.

இதனால், கோபித்துக் கொண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

பின்னர், தங்களது இன்ஸ்டாகிராம் நண்பர்கள் உள்பட 6 பேர் சம்பவத்தன்று மதுபாருக்கு சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் யான்சி கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

யான்சி இலங்கை தமிழர் எனவும், பல ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு பிரச்சினையால் அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யான்சியை கார்ஏற்றி கொலை செய்தது தொடர்பாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாலகுரு (21), சூளைமேட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜோஷ்வா (19), பி.இ. மாணவர் நெற்குன்றம் கிஷோர்குமார் (19) ஆகிய 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!