இந்தியாவிடமிருந்து ஏவுகணை வாங்கும் இந்தோனேசியா!
இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை இந்தோனேசியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்திய மத்திய பாதுகாப்புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற ‘ஷாங்ரி-லா பாதுகாப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
‘‘வியட்நாம் நாட்டுடனான பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.
இதேபோல், இந்தோனேசியா நாட்டுடனான பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் அந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படும்’’ எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் சுமார் 375 மில்லியன் டாலர் மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து, முதன்முதலாக இந்த ஏவுகணையைப் பெற்ற வெளிநாடு என்ற பெருமையைப்பெற்றது.
இந்த நிலையில் தற்போது வியட்நாமைத் தொடர்ந்து இந்தோனேசியாவும் இந்த வரிசையில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.





