இறையாண்மையை விட்டுக்கொடுக்கமாட்டோம்: தைவான் ஜனாதிபதி திட்டவட்டம்!
தைவான் தனது இறையாண்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று அந்நாட்டு ஜனாதிபதி Lai Ching-te திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சீனா தைவானை, தனது நாட்டின் ஒரு பகுதியாகவே கருதுகின்றது. தேவைப்பட்டால் இராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயார் நிலையில் உள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, அந்நாடு தைவானின் தற்காப்பிற்கு ஆதரவளித்தாலும், சீனாவைப் பகைத்துக்கொள்ளாமல் நடுநிலைமையை நிலைநிறுத்தவே முயற்சிக்கிறது.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளுக்கிடையில் பீஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின்போதும் தைவான் விவகாரம் தொடர்பில் பேசப்பட்டது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தைவான் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தைவானில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களைத் தனி இறையாண்மை கொண்ட நாடாகவே கருதுகின்றனர்.
” தைவான் எந்தவொரு மோதலையும் தூண்டாது, அதிகரிக்காது.
அதே நேரத்தில் எந்தவொரு அழுத்தத்திற்கும் பணிந்து நாட்டின் இறையாண்மை, கண்ணியம் மற்றும் ஜனநாயக சுதந்திரமான வாழ்க்கை முறையை விட்டுக்கொடுக்காது’ என்று தைவான் ஜனாதிபதி Lai Ching-te குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘தைவான் எப்போதும் எல்லையின் இருபுறமும் தற்போதைய நிலையைத் தீவிரமாகப் பாதுகாக்கும் நாடே தவிர, அதை மாற்ற முனையும் தரப்பு அல்ல’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




