இலங்கை செய்தி

வடக்கு நிலைவரம் குறித்து ஆஸ்திரேலிய தூதுவருக்கு விளக்கம்!

வட மாகாணத்தின் விவசாயம், கடற்றொழில், காணி உரிமை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மேற்படி சந்திப்பு இன்று (13.05.2026) புதன்கிழமை காலை கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள ‘றீச்சா பார்க்’ வளாகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் வட மாகாணத்தின் சமகால நிலவரங்கள், விவசாய மற்றும் கடற்றொழில் துறைகளின் மேம்பாடு, நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள காணிப் பிரச்சினைகள் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படக்கூடிய எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

வட மாகாணத்தின் விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவது குறித்தும், குறிப்பாக விவசாயிகளின் உற்பத்திகளுக்கான பெறுமதி சேர்ப்பது தொடர்பிலும் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், விவசாய விளைபொருட்களைப் பதனிடும் நிலையங்களை வடக்கில் விரிவுபடுத்துவதன் அவசியத்தையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கடற்றொழில் துறையில் கடலுணவுகள், கடல் பாசி மற்றும் கடல் அட்டை போன்றவற்றுக்கான பதனிடும் தொழிற்சாலைகளை நிறுவுவதன் மூலம், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.

இதற்கமைவாக, விவசாய மற்றும் கடற்றொழில் உற்பத்திகளைக் கொள்வனவு செய்தல், பதனிடுதல் மற்றும் அவற்றிற்கான குளிர்சாதனக் களஞ்சிய வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக தனியார் முதலீடுகளை வடக்கில் ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.

போர் நிறைவடைந்து பல ஆண்டுகளைக் கடந்த போதிலும், வடக்கில் இன்னமும் விடுவிக்கப்படாதுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பிலும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டது.

குறிப்பாக, வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கான பொறிமுறைகளின் முன்னேற்றங்கள் குறித்துக் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

மேலும், இடம்பெயர்ந்த மக்கள் தமது காணி உறுதிகள் மற்றும் ஆவணங்களை இழந்தமையால் தற்போது எதிர்கொள்ளும் சட்டரீதியான சிக்கல்கள் குறித்தும் ஆளுநர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் காணிப் பிரச்சினை தொடர்பான விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய செயற்றிட்டம் தொடர்பிலும் ஆஸ்திரேலிய தூதுவர் வினவி அறிந்துகொண்டார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சுமார் 4 மில்லியன் டொலர் நிதியுதவியின் கீழ், உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘வளர்ச்சிக்கான நிர்வாகம்’ என்ற திட்டத்தின் ஊடாக, வட மாகாணத்துக்குத் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் உயர்ஸ்தானிகர் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், பொதுமக்களுக்குத் தேவையான அரச சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய ‘ஒற்றைச்சாளர’ முறையிலான சமூகப் பராமரிப்பு மையங்களை உருவாக்குதல் மற்றும் முதலீட்டாளர்களுக்கான சேவைகளை எளிமைப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரிகள், வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகச் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!