மஹிந்தவிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை: நடந்தது என்ன?
சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (12) வாக்குமூலத்தை பதிவு செய்தது.
சுமார் இண்டரை மணிநேர விசாரணையின் பின்னர் மஹிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார்.
மஹிந்த ராஜபக்ச இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வந்தவேளை, அவருக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் அங்கு திரண்டிருந்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களும் வருகை தந்திருந்தனர்.
பின்னணி என்ன?
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, எயர்பஸ் விமானக் கொள்வனவின்போது சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, கபில சந்திரசேனவை கைது செய்திருந்தது.
விசாரணையின்போது, எயர்பஸ் ஒப்பந்தத்தின் போது, இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் பணத்தில் 60 மில்லியன் ரூபா பணத்தை, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கொடுத்ததாக, கபில சந்திரசேன முந்தைய ஆணைக்குழு வாக்குமூலத்தில் தெரிவித்திருந்ததாக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு, ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
வாக்குமூலம்
எனினும், கபில சந்திரசேன அவ்வாறு வாக்குமூலம் வழங்கவில்லை என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அவர் வழங்கி இருந்த சத்தியக்கடதாசியில், தனது வாக்குமூலத்தின் எந்தப் பகுதியிலும் இவ்வாறு கூறப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு கடந்த 05 ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி இருந்தது.
5 லட்சம் ரூபா பெறுமதியான ரொக்க பிணையிலும், தலா 100 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலுமே அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், தலா 100 லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளை வழங்குவதற்காக தலா 15 ஆயிரம் ரூபா செலுத்தப்பட்டு வாடகைக்கு இருவர் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் பிணை நிபந்தனைகளையும், நீதிமன்ற நம்பிக்கையையும் மீறியதால் அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை ஒன்றையும் பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
சர்ச்சைக்குரிய மரணம்
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதிவான் கைது உத்தரவை கடந்த 7 ஆம் திகதி பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் கடந்த 8 ஆம் திகதி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இறப்பு குறித்த விசாரணைகள் தொடர்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்சவுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பயணம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்காகவே இன்று அவர் அழைக்கப்பட்டிருந்தார்.




