டவுனிங் தெருவில் இன்னும் ஒரு தசாப்த காலம் பணியாற்ற விரும்புகிறேன் – ஸ்டார்மர்
டவுனிங் தெருவில் இன்னும் ஒரு தசாப்த காலம் பணியாற்ற விரும்புவதாக பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
பதவி விலக வேண்டும் என்ற அரசியல் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையிலும், அடுத்த பொதுத் தேர்தலிலும் தொழிற்கட்சியைத் தானே வழிநடத்துவேன் என்று அவர் உறுதியாகக் கூறினார்.
‘தி சண்டே மிரர்’ மற்றும் ‘தி அப்சர்வர்’ பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகளில், “இதுவொரு 10 ஆண்டு தேசிய மறுமலர்ச்சித் திட்டம்” என ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்திடமிருந்து மோசமான நிலைமையிலான பொருளாதாரத்தையும் சீர்குலைந்த நிர்வாகத்தையும் தாம் மரபாகப் பெற்றதாகவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நீண்டகால திட்டம் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய தேர்தல் முடிவுகள் கடினமானவை என்பதை ஒப்புக்கொண்ட ஸ்டார்மர், நான் விலகப்போவதில்லை எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
இதேவேளை, அமைச்சரவை உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரதமருக்கு எதிராக தலைமைச் சவால் விடுப்பதாக முன்னாள் பிரதி அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் (Catherine West) எச்சரித்துள்ளதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




