போர் நிறுத்தம் இன்னும் அமுலில் உள்ளது!
ஈரானுடனான போர் நிறுத்தம் இன்னும் நடைமுறையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையே ஏற்பட்ட நேரடி மோதல்கள் காரணமாகப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் மூன்று போர்க்கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் சிறிய படகுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது.
‘ஈரான் இன்று நம்முடன் விளையாடிப் பார்த்துள்ளது’ என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், ஹார்முஸ் நீரிணையை நெருங்கிய ஈரானிய எண்ணெய் கப்பல் மற்றும் மற்றொரு கப்பலை அமெரிக்கா குறிவைத்ததாகவும், கடலோரப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் பரிசீலித்து வருவதாகக் கூறப்பட்ட அடுத்த நாளே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ளது என ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதேவேளை, ஈரானிடமிருந்து வந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.





