தேசிய ஒற்றுமை உறுதிப்படுத்தப்படும்: கம்பன் விழாவில் ஜனாதிபதி உறுதி!
அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழும் நாடு தேவை என்றும், தேசிய ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளை எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நேற்று (03) மாலை நடைபெற்ற “கம்பன் விழா”வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களின் முக்கிய இலக்கிய மற்றும் கலாச்சார விழாவான கம்பன் விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி பாரம்பரிய இந்து சம்பிரதாயங்களுடன் வரவேற்கப்பட்டார்.
இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மனிதநேயத்தை முன்னிறுத்திய புதிய சமூகத்தை உருவாக்குவதில் இலக்கியத்திற்கும் கலாச்சாரத்திற்கும் மகத்தான பொறுப்பு உள்ளது என்று மேலும் குறிப்பிட்டார்.

இந்நாட்டின் அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்கிக் கொடுப்பதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றும் தொண்டை மதிப்பிட்டு, கம்பன் புகழ் விருது வழங்கி கௌரவிப்பதும் இதன்போது நடைபெற்றது.
ஜனாதிபதி ஒருவர் இந்த கம்பன் புகழ் விருதினால் கௌரவிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த தமிழ்க் கவிஞரான கம்பனின் பெயரில் அகில இலங்கை கம்பன் கழகம் 1980ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது.
இளைய தலைமுறையினரை கலாச்சாரம் மற்றும் தேசப்பற்றுடன் தார்மீக பாதையில் வழிநடத்துவதே இதன் நோக்கமாக இருப்பதுடன் கம்பன் கழகத்தினரால் ஆண்டுதோறும் கம்பன் விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.

இலங்கை சமூகத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்த புகழ்பெற்ற தனிநபர்களை இன, மத வேறுபாடின்றி கௌரவிக்கும் இந்த விழாவில், முன்னர் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து பல சிறந்த தனிநபர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.





