உக்ரைனுக்கு £78 பில்லியன் கடன் திட்டத்தில் இணைவது குறித்து பிரிட்டன் ஆலோசனை
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் சுமார் £78 பில்லியன் பவுண்ட் கடன் திட்டத்தில் இணைவது, ஐரோப்பிய கூட்டமைப்புடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் Starmer தெரிவித்துள்ளார்.
ஆர்மீனியாவில் நடைபெறவுள்ள ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக அவர் இதனைத் தெரிவித்துள்ளதார்
அத்துடன் பிரித்தானியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
இந்த உதவி திட்டம் உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், பிரித்தானிய நிறுவனங்களுக்கு எதிர்கால ஒப்பந்த வாய்ப்புகளையும் வழங்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
இந்த கடன் திட்டத்தில் பிரித்தானியா பங்கேற்பது குறித்து தற்போது ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
ஆர்மீனியாவின் யெரெவனில் நடைபெறும் EPC உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட 48 உலகத் தலைவர்களில் பிரிட்டன் பிரதமரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஹங்கேரி தனது வீட்டோவை நீக்கியதைத் தொடர்ந்து, ஐரோப்பிய உறுப்புநாடுகள் கடந்த மாதம் உக்ரைனுக்கு €90 பில்லியன் யூரோ கடன் வழங்கும் திட்டத்தை ஒப்புதல் அளித்துள்ளன. இந்த உதவித் தொகை அடுத்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட உள்ளது.
இந்த நிதியில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு உக்ரைனின் பாதுகாப்பு தேவைகளுக்காகவும், மீதமுள்ள தொகை பொருளாதார உதவிக்காகவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் துணைப் பிரதமர் இந்த நிதியை “வாழ்வா சாவா நிலை” என்று குறிப்பிட்டிருந்தார்.





