ஈரானில் 10 ஆயிரம் இலக்குகள்மீது தாக்குதல்!
ஈரானில் 10 ஆயிரம் இலக்குகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான்மீது கடந்த 28 ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்திவருகின்றன. ஈரானும் பதிலடி கொடுத்துவருகின்றது.
இப்போர் இன்று 28 ஆவது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையிலேயே அமெரிக்காவின் ராணுவ மத்திய கமாண்டை சேர்ந்த கடற்படை அட்மிரல் பிராட் கூப்பர் Navy Admiral Brad Cooper மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
“ ஈரான் போரின்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கி அழித்துள்ளோம். இதில் பல்வேறு வெடிபொருட்கள் ஆலைகளும் அடங்கும்.
எங்களின் துல்லியத் தாக்குதல்கள் ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலைகுலையச் செய்துள்ளன.
மேலும் எங்கள் போர் விமானங்கள் குறிப்பிடத்தக்க அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன.
ஈரானியக் கடற்படையின் மிகப்பெரிய கப்பல்களில் 92 சதவீதத்தை அமெரிக்கா அழித்துவிட்டது.
இப்பகுதியிலும், உலகம் முழுவதிலும் தங்கள் கடற்படை வலிமையையும் ஆதிக்கத்தையும் ஈரான் இழந்துவிட்டது.
அந்த அளவுக்கு அழிவை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளோம். ஈரானுக்குச் சொந்தமான மூன்றில் 2 பங்கு வெடிபொருட்கள் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரானின் பரந்து விரிந்த ராணுவ உற்பத்தி கட்டமைப்பை முழுமையாக அழிக்கும் பாதையை நோக்கி பயணித்து வருகிறோம் என Brad Cooper மேலும் குறிப்பிட்டார்.




