“தோல்வியை ஒப்புக்கொள்!” – ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறும் இல்லாவிட்டால் முன்பை விட கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்டதாகவும் , தொடர்ந்து போரிட முடிவுசெய்துள்ளதாகவும் அரபு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அல் ஜசீராவின் தகவல்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக ஈரான் மத்திய மற்றும் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியுள்ளது.
இதன் விளைவாக, அப்பகுதியில் நிலைமை மேலும் அபாயகரமானதாக மாறி வருகிறது.
இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் லெபனான் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள ‘இடைநிலை மண்டலம்’ என அழைக்கப்படும் பகுதி மேலும் விரிவுபடுத்தப்பட்டு வருவதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அரபு ஊடகங்களின்படி, பஹ்ரைன், குவைத், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகள், ஈரானிய ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் அழித்ததாகக் கூறியுள்ளன.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையை நீண்டகாலம் மூடுவது உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
அறிக்கையின்படி, அப்பகுதி முழுவதும் உயிர் இழப்பு மற்றும் அழிவு குறித்த அச்சங்கள் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சமூகம் பதட்டங்களை உடனடியாகத் தணிக்குமாறு அழைப்பு விடுத்து வருகிறது.





