தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இயலுமையானது, மாதத்தில் மூன்று தடவைகள் எரிபொருள் விலையை அதிகரித்ததன் மூலம் வெளிப்படுவதாக முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விமர்சித்துள்ளார்.
எனவே, அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி எதிர்ப்பு பேரணியொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற பாரிய ஊழல் காரணமாகவே இன்று டீசல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், ஊழல் செய்த அமைச்சர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மக்கள் மீது சுமை ஏற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும், தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலைகளை உயர்த்த எந்தவொரு அரசாங்கமும் இடமளிக்கவில்லை லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கப்பூர் சந்தை விலைக்கு ஏற்பவே எரிபொருள் விலை மாற்றப்படுவதாக பொய்யுரைக்கும் அரசாங்கம், மக்களை ஏமாற்றுவதற்காக பல கதைகளை கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தை நிலவரப்படி இதைவிடக் குறைந்த விலையில் எரிபொருள் வழங்க முடியும் எனவும் முன்னாள் ஆளுநர் கூறியுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களாக உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கத்திடம் எவ்விதமான திட்டமிடலும் இருக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்றார்.