Image credit: NASA, ESA, Dennis Bodewits (AU)
நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி (Hubble Space Telescope), விண்வெளியில் ஒரு வால்நட்சத்திரம் பல துண்டுகளாக உடைந்து சிதறுவதை முதன்முறையாக மிக நெருக்கமாகவும், நேரலையாகவும் படம் பிடித்துள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தற்செயலாக நடந்த கண்டுபிடிப்பு என்றும் விஞ்ஞானிகள் உண்மையில் வேறொரு விண்வெளிப் பொருளை ஆய்வு செய்யவே திட்டமிட்டிருந்தனர். ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால், அவர்களின் கவனம் C/2025 K1 (ATLAS) என்ற வால்நட்சத்திரத்தின் பக்கம் திரும்புள்ளது. அப்போது, அந்த வால்நட்சத்திரம் சூரியனுக்கு மிக அருகில் சென்ற வெப்ப அழுத்தத்தினால் சிதைந்து கொண்டிருப்பதை ஹப்பிள் தற்செயலாகப் படம் பிடித்துள்ளது.
மேலும் ஹப்பிள் எடுத்த படங்களில், அந்த வால்நட்சத்திரம் குறைந்தது நான்கு பெரிய துண்டுகளாக உடைந்துள்ளதும், ஒவ்வொன்றைச் சுற்றியும் ஒரு வாயு மண்டலம் (Coma) இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.
இந்த வால்நட்சத்திரம் புதனின் (Mercury) சுற்றுப்பாதைக்குள் நுழைந்தபோது, சூரியனின் கடும் வெப்பம் மற்றும் அழுத்தத்தினால் அதன் உட்புறக் கட்டமைப்பு பலவீனமடைந்து உடையத் தொடங்கியுள்ளது.
இந்த வால்நட்சத்திரங்கள் உடையத் தொடங்கும் போது, அவற்றின் உள்ளே பல பில்லியன் ஆண்டுகளாக உறைந்து கிடக்கும் பழங்கால பனி மற்றும் தூசுகள் வெளியேறுகின்றன. இது சூரிய குடும்பம் உருவான விதம் குறித்த புதிய தகவல்களை வழங்குகின்றது என்றும் தெரிவிக்கின்றனர்.
ஆபர்ன் பல்கலைக்கழகத்தின் (Auburn University) பேராசிரியர் ஜான் நூனன் “முன்பு எப்போதும் ஹப்பிள் ஒரு வால்நட்சத்திரம் உடையத் தொடங்கிய சில நாட்களிலேயே அதைப் படம் பிடித்ததில்லை. இது விண்வெளிப் பாறைகளின் ஆயுட்காலம் மற்றும் அவை எவ்வாறு அழிகின்றன என்பதைப் புரிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பு,” என்று தெரிவித்துள்ளார்.
https://www.space.com/astronomy/comets/hubble-space-telescope-accidentally-witnesses-comet-c-2025-k1-atlas-breaking-apart