பிளாஸ்டிக் மழையின் அபாயம்: அழியும் காடுகளும், நம் உயிரும்!
காலநிலை மாற்றத்தினால் ஏற்கனவே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் உலகக் காடுகளுக்கு, இப்போது ‘பிளாஸ்டிக் மழை’ (Plastic Rain) என்ற புதிய அபாயம் உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
ஜெர்மனியின் டார்ம்ஸ்டாட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (TU Darmstadt) மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்புகள் நடத்திய சமீபத்திய ஆய்வில், நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் (Microplastics) இப்போது வளிமண்டலத்தின் வழியாகப் பயணித்து, மனித நடமாட்டமே இல்லாத அடர்ந்த காடுகளுக்குள்ளும் ஊடுருவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது எப்படி காற்றில் பரவுகின்றது: நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மிக நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் காற்றில் கலந்து மேகக்கூட்டங்களுடன் பயணிக்கின்றன.
மேலும் காடுகளின் மேல் அடுக்கு மரங்கள் (Canopy) இந்தக் காற்றைத் தடுத்து நிறுத்துகின்றன. அப்போது பிளாஸ்டிக் துகள்கள் மரங்களின் இலைகளில் படிகின்றன. இதை விஞ்ஞானிகள் ‘கோம்ப்-அவுட் எபெக்ட்’ (Comb-out effect) என்று அழைக்கிறார்கள்.
அது மட்டும் அல்லது மழை பெய்யும் போது, இலைகளில் தங்கியிருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் தண்ணீருடன் அடித்துச் செல்லப்பட்டு காட்டின் தரைப்பகுதியை அடைகின்றன. மேலும், இலைகள் உதிரும்போதும் இந்தத் துகள்கள் மண்ணில் கலக்கின்றன.
இதனால் ஏற்படும் பாதிப்புகள்:
மண்ணின் வளம் பாதிப்படைகிறது: பிளாஸ்டிக் துகள்கள் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் செயல்பாட்டைத் தடுத்து, மண்ணின் நைட்ரஜன் சுழற்சியைப் பாதிக்கின்றன. இது மரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் குறைக்கிறது.
ஒளிச்சேர்க்கை குறைவு : அதாவது இலைகளின் மேற்பரப்பில் பிளாஸ்டிக் துகள்கள் படிவதால், மரங்கள் சூரிய ஒளியைப் பெற்று உணவு தயாரிக்கும் (Photosynthesis) திறன் 12% வரை குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
வேர் மண்டலம்: நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் மரங்களின் வேர் வழியாக உள்ளே சென்று திசுக்களில் தங்கி, நீரை உறிஞ்சும் திறனைக் குறைக்கின்றன.
“காடுகள் என்பவை வெறும் மரங்களின் தொகுப்பு மட்டுமல்ல, அவை கார்பனை உறிஞ்சி உலகைக் காக்கும் நுரையீரல்கள். பிளாஸ்டிக் துகள்கள் இந்தச் செயல்பாட்டைச் சீர்குலைப்பது புவி வெப்பமடைதலை இன்னும் வேகப்படுத்தும்” என்று இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் காலின் ஜே. வெபர் (Dr. Collin J. Weber) தெரிவித்துள்ளார்.
https://www.sciencedaily.com/releases/2026/03/260323005535.htm





