இலங்கை – இந்திய கலாசார ஒத்துழைப்பு குறித்து உயர்ஸ்தானிகராலயத்தில் விசேட கவனம்
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கலாசார ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.
அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
தற்போது நடைமுறையிலுள்ள பல கலாசாரத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் கலாசார நிலையத்தை அந்தப் பகுதி மக்களிடம் கையளிப்பது மற்றும் அதன் பராமரிப்புப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இலங்கையிலுள்ள அரிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு குறித்து மேலதிகமாக கலந்துரையாடப்பட்டது.





