“எரிபொருள் சிக்கனம்” – ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு!
“எரிபொருள் சிக்கனம் குறித்து ஒவ்வொரு அமைச்சும் நடைமுறைச் சாத்தியமான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் . அது தரவுகளின் அடிப்படையில் குறைந்தபட்ச வலுசக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் நிலையான செயன்முறையாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பான அறிக்கையை அமைச்சு மட்டத்தில் உடனடியாக வழங்குமாறு அறிவுறுத்தினார்.
அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினருடன் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
நேற்று (16) அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய, அரச மற்றும் தனியார் விநியோகச் சங்கிலிகளைத் தடையின்றி முன்னெடுத்து, மக்களுக்குத் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக இக்குழு நியமிக்கப்பட்டது.

எரிபொருள் விலை உயர்வால் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் விலைக் கட்டுப்பாட்டிற்கான மாற்று வழிகள் குறித்து ஆராயப்பட்டது.
சதொச உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் எரிபொருள் தேவைகளைச் சேகரித்து, அந்தச் சேவைகளைத் தொடர்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் இங்கு தெரிவித்தார்.
சுற்றுலாத் துறையின் எரிபொருள் தேவைகளைக் கண்டறிந்து, முன்னைய QR முறையைப் பேணுவது குறித்தும், ஹோட்டல்களுக்குத் தேவையான எரிவாயு மற்றும் எரிபொருள் வசதிகளை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பலநாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் துறைமுக நடவடிக்கைகளுக்கு எரிபொருள் வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருவதோடு, ஒதுக்கீடு செய்யப்பட்ட எரிபொருள் அளவில் உள்ள சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
நேற்றைய அறிவுறுத்தல்களுக்கு அமைய, கைத்தொழிலாளர்களின் விபரங்களைச் சேகரித்து பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் இங்கு குறிப்பிட்டார்.

விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான எரிபொருளை வழங்கும் போது, விவசாய ஆராய்ச்சி அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படுவதுடன். அந்தச் செயல்முறையை இலகுபடுத்துவதற்கு விவசாய சங்கங்களை எவ்வாறு ஈடுபடுத்தலாம் என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
துறைமுகச் செயல்பாடுகள் மற்றும் விமான நிலைய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் வழங்குவதில் எழுந்துள்ள நிலைமை குறித்து, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பதற்கும், இலங்கை முதலீட்டுச் சபையின் செயல்பாடுகள் மற்றும் பெருந்தோட்டத் துறை போன்ற துறைகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குதல் ஆகியவை தொடர்பிலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
சுகாதார சேவையை அத்தியாவசிய சேவையாக செயற்படுத்தும் அதே வேளை, ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அதிகபட்ச எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதை உறுதி செய்வது குறித்து கலந்துரையாடல்களை நடத்தி, தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதன்படி, ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க பிரதேச மட்டத்திலான எரிபொருள் கையிருப்பைப் பேணும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வது தொடர்பான எரிபொருள் தேவைகள் குறித்த தகவல்கள் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
மக்களின் போக்குவரத்துத் தேவைகளை முறையாகப் பூர்த்தி செய்வதற்காகச் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அச்செயல்முறைகளைத் திட்டமிட்டுத் தொடர்வது குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
தற்போதைய சூழ்நிலையில் தேசிய பொருளாதாரத்தில் குறைந்தபட்ச பாதிப்பு ஏற்படும் வகையில், நிர்மாணத் துறையின் தற்போதைய நிலையை முகாமைத்துவம் செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து புதுப்பிக்கப்படும் தகவல் கட்டமைப்பைப் பேணி, அவற்றை மீளாய்வு செய்து, உருவாகியுள்ள சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்வை தொடர்ச்சியாக முன்னெடுக்கத், தேவையான முழுமையான தலையீடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.





