தேசிய பாதுகாப்பு குறித்து பதறுகிறார் விமல்: சஜித்மீதும் பாய்ச்சல்!
“தேசிய நல்லிணக்கம் பற்றி பேசிக்கொண்டு தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையிலேயே அரசாங்கம் செயல்படுகின்றது.” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச Wimal Weerawansa குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியல் பழிவாங்கலுக்காக புலனாய்வு பிரிவினர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.இது முற்றிலும் தவறானது எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“ மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தேசிய மட்டத்தில் ஏற்படும் தாக்கங்களை, சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்பது சந்தேகமே.
நெருக்கடி நிலை தொடர்பில் ஆட்சியாளர்கள் பொறுப்பற்ற விதத்தில் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். எதிர்க்கட்சி தலைவரின் செயல்பாடும் திருப்தியளிக்கவில்லை.
நாட்டில் பல தீவிர பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஈரான் போர்க்கப்பலை தாக்கிய நீர்மூழ்கிக் கப்பலின் ரகத்தை ஆராய்கிறார்.
அதாவது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வெளியிட வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது.” எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.





